விண்மீன் விழியில் நுழைந்தேன்: Vinmeen Vizhiyil Nulainthen (Tamil Edition)
Language | Tamil |
---|---|
File size | |
Simultaneous device usage | |
Text-to-Speech | |
Screen Reader | |
Enhanced typesetting | |
Word Wise | |
Print length |
உருக வைக்கும் காதல் கதை… டீசர் சக்திவேலுக்கு இந்த பெண் பார்க்கும் படலத்தில் எல்லாம் ஆர்வம் இல்லை. இறுதிவரை அங்கே வரப்போவது இல்லை என்று சொல்லி இருந்தவன், என்ன நினைத்தானோ தெரியவில்லை வந்து சேர்ந்து விட்டான். கூலர்ஸை கழட்டி பாக்கெட்டில் வைத்துக் கொண்டு ஜீப்பில் இருந்து பாய்ந்து இறங்கினான். காக்கி பேண்ட்டும் வழக்கம் போல கட்டம் போட்ட சட்டையும் போட்டிருந்தவன், ஐம்பொன் காப்பை இறக்கியபடி துளசியின் வீட்டை நோக்கி நடந்தான். ஆங்காங்கே வெடிப்புகள் இருக்கும் வீடுதான், அவர்களின் ஏழ்மையை எடுத்துரைத்துக் கொண்டு இருந்தது. அவன் விழிகள் உடைந்த ஓட்டில் இருந்து திண்ணை வரை ஆராய்ச்சியாக படிய, அவன் ஜீப் சத்தம் கேட்டு வாசலுக்கு வந்து எட்டிப் பார்த்த அவன் தங்கை நந்தினி, “அண்ணா வந்து இருக்கார்.” என்றாள் சத்தமாக.அந்த ஒரு வார்த்தை தான், அதுவரை அறைக்குள் யோசனையாக இருந்த துளசியின் நெஞ்சில் நீர் வற்றிப் போனது. வழக்கம் போல் பயம் தொற்றிக் கொண்டது. அவனிடம் வயலில் வைத்து அடிவாங்கி, ரத்த வெள்ளத்தில் கிடந்தவர்களைக் கண்கூடாக பார்த்து இருக்கின்றாள். அன்று அவன் காலில் நீரை ஊற்றவே அவ்வளவு நடுக்கம் அவள் கைகளில். இப்போது அவன் முன்னே நிற்கவேண்டும் என்று நினைக்கவே நெஞ்சு அடைத்துப் போனது. அவன் உயரத்தை விட வீட்டின் நிலை தாழ்வாக இருந்தது. குனிந்து தான் நுழைய வேண்டும். குனிந்தபடி வீட்டினுள் நுழைந்தான்.உள்ளே நுழைந்தவன் விழிகள் அங்கே நிலத்தில் இருக்கும் பாயில் அமர்ந்து இருந்த குடும்பத்தினர் மேல் படிய, “வாப்பா!” என்றார் அங்கயற்கண்ணி. வேலுமுருகனும் கந்தசாமியும் மட்டுமே ஒவ்வொரு இருக்கையில் அமர்ந்து இருந்தார்கள்.ராக்கம்மாவுக்கோ என்ன செய்வது என்று தெரியவில்லை. வேறு நாற்காலிகள் அவர்கள் வீட்டில் இல்லை.”இருக்கிறதுக்கு வேற…” என்று நடுங்கிக் கொண்டே ஆரம்பித்தவரை கை நீட்டி தடுத்தவன், “நான் நிக்கிறேன்.” என்று சொன்னபடி, அங்கிருந்த சுவற்றில் சாய்ந்து நின்றான். சுவரெல்லாம் வெடிப்பு வேறு. கையை நீட்டி வெடிப்பு இருந்த இடத்தை அழுந்த தேய்க்க, சரசரவென அதில் இருந்து கட்டிட துகள்கள் கொட்டின. அதனைப் பார்த்துவிட்டு துளசியின் தாயைப் பார்த்தான், விழிகளில் கூர்மை. “நீத்து சுவர்… அதுதான்…” என்று இழுக்க, “ம்ம்…” என்று சொன்னவனோ அங்கே நின்ற மதியழகனைக் கண்களால் அழைத்தான். அவன் அருகே வந்ததும் அவன் காதருகே சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டு, மார்புக்கு குறுக்கே கையைக் கட்டிக் கொண்டு சுவரில் சாய்ந்து நின்றவன், “பொண்ண வர சொல்லுங்க, பார்த்துட்டு கிளம்புறேன்.” என்றான்.அறைக்குள் வேகமாக சென்ற ராக்கம்மா, “சீக்கிரம் வாம்மா.” என்று துளசியிடம் சொல்ல, பதட்டமாக எழுந்து கொண்டவள் குந்தவி கொண்டு வந்து நீட்டிய, தேநீர் குவளைகளை வாங்கிக் கொண்டு வெளியே வந்தாள். கைகள் வேறு நடுங்கின. கஷ்டப்பட்டு பயத்தை அடக்கிக் கொண்டாள். சக்திவேலின் விழிகள் துளசியில் ஆராய்ச்சியாக படிந்தது. மாநிறம் அவள், வெயிலில் வயல் வேலை செய்து இன்னும் நிறம் மங்கி இருந்தது. மெல்லிய உடல் வாகு. அவனில் பாதி கூட இருக்க மாட்டாள். ஐந்தரை அடி உயரம் இருப்பாள். அவனோ ஆறடிக்கும் சற்று அதிகமான உயரம். எல்லாவற்றையும் ஆராய்ந்தான். அவள் முந்தானையில் இருந்த தையல் வரை அவன் கண்களுக்கு தப்பவில்லை. அவன் விழிகள் அவளையே ஆராய்ச்சியாக அளக்க, தேநீர் குவளையுடன் அவன் முன்னே வந்து நின்றவளுக்கு கால்கள் வேறு நடுங்கின. தலையைக் குனிந்து கொண்டு அவன் பாதத்தைப் பார்த்தாள். நீளமான விரல்களுடன் கூடிய பெரிய பாதம். அவனை ஏறிட்டுப் பார்க்கவே பயமாக இருந்தது. மார்புக்கு குறுக்கே கையைக் கட்டியபடி அவளை நோக்கி கொஞ்சமாக குனிந்தவன், “நிமிர்ந்து பாரு.” என்றான். விழிகளைப் பயத்துடன் உயர்த்தி பார்த்தாள். “யாரையும் விரும்புறியா?” என்று கேட்டான். முதல் கேள்வியே அபத்தமாக இருந்தது. அவசரமாக அவனைப் பார்த்தபடி இல்லை என்று தலையாட்டி மீண்டும் குனிந்து கொள்ள, “விரும்பிட்டு இருந்தா இப்போவே சொல்லிடு, நானே என் செலவுல கல்யாணம் பண்ணி வச்சுடுறேன். கல்யாணத்துக்கு அப்புறம் ஏதும் ஆச்சுன்னா சாவடிச்சிடுவேன். கல்யாணத்துக்கு அப்புறம் என்னை தவிர எவன் நினைப்பும் உனக்கு இருக்க கூடாது, புரியுதா?” என்று கேட்க, அவளோ தலையைக் குனிந்தபடி மௌனமாக நின்றாள்.”புரியுதா?” என்றான் மீண்டும் கர்ஜிக்கும் குரலில்.சட்டென நிமிர்ந்து அவனைப் பார்த்தவள், “ம்ம்…” என்றாள் அவசரமாக.அவளை ஒரு கணம் பார்த்து விட்டு, “கல்யாணத்துக்கு சீக்கிரம் ஏற்பாடு பண்ணுங்க.” என்று சொன்னவன், அவள் நீட்டிய தேநீரை கூட எடுக்காமல் விறுவிறுவென வெளியேறி விட்டான். முதல் பார்வையிலேயே மிரட்டி செல்கின்றான். இவனுடன் எப்படி வாழ்வது என்கின்ற கேள்வி இப்போதே அவளுக்குள் உதிக்க ஆரம்பித்து விட்டது.